ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் எண்ணி துணிக நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, காமராஜ் கல்வியின் ஆற்றலை புரிந்திருந்தார். அதனால் பல கல்வி கூடங்களை திறந்தார் மதிய உணவு வழங்கினார். அவர் ஏற்படுத்திய கட்டமைப்பில் பயணித்தோம். ஆனால் இன்று அந்த தொலைநோக்கு பார்வை இல்லை.
அரசு பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது. 60 சதவிகிதம் மாணவர்களால் எண்களை படிக்க முடியவில்லை 40 சதவிகிதம் மாணவர்களால் எழுத்துக்களை படிக்க முடியவில்லை 8, 9 ம் வகுப்பு மாணவர்கள் எண்களையும், எழுத்துகளயும் படிக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
தமிழகம், கல்வித்தரம் குறைந்தும், மாணவர்கள் கற்கும் திறன் குறைந்தும், அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வேலை வாய்ப்பின்மை ஏற்படுகிறது. பல அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளன.
மாணவர்கள் கஞ்சா மட்டுமில்லாமல், ஹெராயின் போன்றவற்றுக்கு அடிமையாக உள்ளனர் போதை பழக்கம் கட்டுப்படுத்திட வேண்டும், எளிதாக போதைப் பொருள் கிடைக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருள் வருகின்றன.. பள்ளி, கல்லேரிகளில் போதை பொருள்கள் சப்ளை நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். நாளிதழ்களை பார்த்தால் கஞ்சா சப்ளை குறித்த செய்திகள் அதிகமாக உள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை நோக்கமாகக் கொண்டு போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன, மாணவர்களை பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் போதை இல்லாத இடங்களாக மாற்ற வேண்டும், அனைத்து துறைகளிலும் நாம் பலமாக இருக்க வேண்டும் பலவீனமாக இருந்தால் யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள் எனக் கூறினார்.