தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வை தருகிறது. சிறப்பான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ததற்கு நன்றி. அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.
தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது. தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன்பிறப்புகள். நம் எல்லோருக்கும் பாசத்தை ஊட்டிய தாய் தமிழ்த்தாய் தான். தமிழை தமிழே என்று அழைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.