தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள உலகப் புகழ்வாய்ந்த பூண்டி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப்.8) இரவு தேர் பவனி நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை காண சென்னை எழும்பூர் நேருபார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் சார்லஸ் மகன்கள் பிராங்கிளின் ( 23), ஆண்டோ (20) மற்றும் அவரது நண்பர்கள் கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) ஆகிய 5 பேரும் பூண்டிக்கு வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் இன்று கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்தனர். அப்பொழுது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் 5 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சிறிது நேரத்தில் மூழ்கினர். இதைப் பார்த்த அங்கிருந்த நபர்கள் கரைக்கு வந்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து 5 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கலையரசன் ,கிஷோர் ஆகிய 2 பேர் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பிராங்கிளின், ஆண்டோ, மனோகரன் ஆகிய 3 பேர்களை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.