நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் புத்தகப் பையை சோதனையிட்டபோது, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் பையில் அரிவாள் இருந்துள்ளது.
அந்த மாணவனை தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அதே பள்ளியில் படிக்கும் சக மாணவன் ஒருவனுடன் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த மாணவனை எச்சரிப்பதற்காக அரிவாளை எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த தாழையூத்து போலீசார், விசாரணைக்குப் பின்னர், அரிவாள் எடுத்து வந்த மாணவன் உட்பட 3 மாணவர்களை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.