கோவையில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன், ஜி.எஸ்.டி தொடர்பாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பேசியிருந்தார். இவரது இந்த பேச்சு, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹோட்டல் அறையில், நிர்மலா சீதாராமனிடம், சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சீனிவாசனை பகிரங்கமாக மிரட்டி, மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள் என்று, எதிர்கட்சியினர் பலரும், பாஜகவை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “கோவையில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற சிறிய வியாபாரம் செய்யும் முதலாளி, தங்களது Public Servant-களிடம், ஜி.எஸ்.டி-யை எளிமையாக்குங்கள் என்று கேட்கும்போது, அவரது கோரிக்கை, அவமானத்தை தான் சந்திக்கிறது.
பில்லினியராக இருக்கும் நண்பர் ஒருவர் சட்டத்தை வளைப்பதற்கு, சட்டத்தை மாற்றுவதற்கு கோரினால், மோடி ஜி சிவப்பு கம்பளத்தை விரிப்பார்” என்று தெரிவித்தார்.
மேலும், “அதிகாரத்தில் இருப்பவரின் ஈகோ காயப்படும்போது, அவமானத்தை தான் அவர்கள் வழங்குவார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பதிவிட்ட அவர், “இந்த ஆணவம் பிடித்த அரசாங்கம், மக்களின் குரலை கேட்டிருந்தால், எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி லட்சக்கணக்கான வியாபாரத்தின் பிரச்சனையை சரி செய்திருக்கும் என்பதை, அவர்கள் புரிந்துக் கொண்டிருப்பார்கள்” என்றும் அவர் கூறினார். இவரது இந்த எக்ஸ் தள பதிவு, இணையத்தில் 20 ஆயிரம் லைக்ஸ்களையும், ஆயிரம் கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.