தேனி மாவட்டம் சின்னமனூர் அ.தி.மு.க நகர செயலாளர் பிச்சைக்கனி இவரது வீடு மற்றும் அலுவலகம் குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
இவரது வீட்டு வாட்ச்மேனாக மாரிமுத்து என்பவர் பணிபுரிந்து வருகின்றார். வழக்கம்போல் அவர் பணியில் இருக்கும் போது நள்ளிரவு 2 மணி அளவில் அவரது இல்லத்தின் முன்பு மோட்டார் பைக்கில் வந்த இரண்டு நபர்கள் அவரது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
சத்தம் கேட்டுப் பார்த்த வாட்ச்மேன் மாரிமுத்து தீ பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பதட்டத்தில் தீ எரிவதை அணைத்தவர் கூச்சலிட்டதை கண்டு வீட்டில் தங்கி இருந்த நகர செயலாளர் பிச்சைகனி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்துள்ளனர்.
அப்போது இரண்டு மர்ம நபர்களும் மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து நகரச் செயலாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய பாட்டில்கள் மற்றும் வெடி மருந்து திரிகளை பரிசோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அ.தி.மு.க நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அறிந்த அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.
மேலும் தடயவியல் துறையினரை வரவழைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அ.தி.மு.க நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.