மகாராஷ்டிரா மாநிலம் பட்லாபூர் பகுதியில், 2 மாணவிகள், 4-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அந்த பள்ளியில் பணியாற்றி வந்த நபரை, கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி, காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆனால், அந்த குற்றவாளி, நேற்று காவல்துறையினரின் துப்பாக்கியை பறித்து, அவர்களை சுடுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால், தற்காப்புக்காக, காவல்துறையினர் அவரை சுட்டு என்கவுண்டர் செய்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஒருசிலர் இந்த என்கவுண்டருக்கு ஆதரவாகவும், ஒருசிலர் இதற்கு எதிராகவும் தங்களது கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேந்திர ராஜ்புத், அம்மாநில ஆளுங்கட்சியை, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ANI ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், “இன்று மகாராஷ்டிரா உள்ள அதே நிலையில் தான், உத்தரபிரதேசமும் உள்ளது என்பது தெளிவாகியுள்ளது. அங்கு, குற்றவாளிகள் காவல்துறையினரை துப்பாக்கியில் சுட்டுக் கொண்டு இருக்கின்றனர். மேலும், காவல்துறையினர் தான் இதற்கு பொறுப்பாகியுள்ளனர்.
காவல்துறையினர் மீது துப்பாக்கி சுடும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு தைரியும் உள்ளது என்றால், மகாராஷ்டிரா அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுமக்கள் அனைத்து விஷயங்களை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். தற்போதுள்ள மகாராஷ்டிரா அரசு எதற்கு தகுதியானது கிடையாது என்பது அவர்களுக்கு தெரியும். காலம் தான் அனைத்தையும் மாற்றும். மகாராஷ்டிரா அரசால் எதையுமே செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.