மின்னஞ்சல் மூலமாக மதுரையில் உள்ள 9 முக்கிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அடுத்து, போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பிறகு தகவல் வெறும் வதந்தி என தெரியவந்தது. இம்மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நாளை விருதுநகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மாலை மதுரை வருகிறார். இந்நிலையில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 9 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து மிரட்டல் விடப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அது போன்று வெடிகுண்டு பொருட்களோ அல்லது வேறு அபாயகரமான பொருட்களோ கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது போன்ற மிரட்டல் விடுத்ததற்கான காரணம் என்ன? வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.