விமானப் படையின் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி குற்றாம்சாட்டியுள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று (அக்.06) இந்திய விமானப் படையில் 92-ம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்வையிட வந்த ஐந்து பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர்.
நெரிசலில் சிக்கி 240-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்களில் 93 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறியதாவது: “முதலமைச்சரின் அறிவிப்பு காரணமாகத்தான் விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினர். இத்தனை லட்சம் மக்கள் அங்கு கூடுவார்கள் என்பதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டு அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்திருந்தால் உயிரிழப்புகளை அரசு தடுத்திருக்கலாம்.
ஆனால் முதலமைச்சர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன. இது அரசின் செயலற்றதன்மை, கையாலாகாத தன்மையை காட்டுகிறது. இதே விமான சாகச நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆண்டுகொண்டிருப்பதால் மக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இனியாவது திமுக அரசு இப்படிப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற நிகழ்ச்சியை நடத்தும்போது முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கான முழு பொறுப்பையும் ஸ்டாலின்தான் ஏற்கவேண்டும்” இவ்வாறு இபிஎஸ் தெரிவித்துள்ளார்.