முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக ரத்தன் டாடா (86) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இல்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், நேற்று (அக்.9) இரவு அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதி செய்தார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
அவரது தொலைநோக்குமிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும், புதுமையிலும், மனிதநேயச் செயல்பாடுகளிலும் ரத்தன் டாடா காட்டிய இடையறாத அர்ப்பணிப்பினால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை அவர் பதித்துச் சென்றுள்ளார்.
இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.
இத்துயர்மிகு தருணத்தில், ரத்தன் டாடா குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.