அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஆசிரியர்களின் வாகனங்களை பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று (அக்.10) பள்ளிக்கு சென்றிருந்த ஆசிரியர்களில் சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யுமாறு மாணவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் பள்ளி நேரத்தில், சீருடையுடன் ஆசிரியர்களின் வாகனங்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். இதனை அதே கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் ஆசிரியர்களின் இருசக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.