ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும். விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும். மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையான வீரம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றை அருள வேண்டி, நவராத்திரி எனப்படும் 9 திருநாட்களின், முதல் 3 நாட்கள் வீரமிகு துர்காதேவியையும், அடுத்த 3 நாட்கள் செல்வம் பொழியும் லட்சுமி தேவியையும், நிறைவாக 3 நாட்கள் கல்வி தரும் சரஸ்வதி தேவியையும், மக்கள் பக்தியுடன் போற்றி வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமாகும். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை உணர்ந்து, மக்கள் தங்கள் தொழில் சார்ந்த கருவிகளை இறைபொருட்களாக பாவித்து, தொழில் பெருக அதற்கு பூஜை செய்து, வாழ்வில் வளம்பெற தெய்வத்தை வணங்கிடும் நன்னாள் ‘ஆயுத பூஜை’ திருநாளாகும்.விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் செயல்கள் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முதலாக கல்வியை தொடங்குதல், புதிய தொழில்களை ஆரம்பித்தல் போன்ற புதிய முயற்சிகளை துவக்கி, விஜயதசமி திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், வாழ்வில் வெற்றி பெற்று, நலமுடனும், வளமுடனும் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “இசை… ஞானம்… அறிவு… கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு நன்றி செலுத்திடும் வகையில் நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பக்தி உணர்வோடு கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும், அறிவாகவும் இருந்து செயல்படும் இறையருள் அனைவரின் வாழ்விலும் வெற்றியைத் தர வேண்டும். இந்த நன்னாளில் நம் நாட்டு மக்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை கூறி நல்லறிவு, திறன், மகிழ்ச்சி மற்றும் அனைத்து வளங்களும் நாம் அனைவரின் வாழ்விலும் பெற்றிட இந்த நவராத்திரியில் நாம் வணங்கும் இறை சக்தி அருள் புரியட்டும்” என தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றையும் தரும் தெய்வங்களை வழிபடும் இந்தத் திருநாளில் – அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள். வாழ்வில் இருள் நீங்கி, கல்வி எனும் வெளிச்சம் செல்வத்தை அள்ளித் தந்திடவும், வீரம் என்னும் ஆயுதத்தை ஏந்தி உலகை வெற்றி பெற்றிடவும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு ஏற்றம் பெறவும், உலகம் நமது தேசத்தை புகழ்ந்திடவும், நாள்தோறும் உழைக்கும் ஒவ்வொருவரையும் இந்தத் தருணத்தில் நினைவு கூர்ந்து வணங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு: “தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும், வணங்கி வழிபடும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.