தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று காலை (அக்.21) முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தீபாவளிக்கு, பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக, 14,086 பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் இருந்து மட்டும், 11,176 பேருந்துகள் இயக்கப்படும். அக்.28ம் தேதியன்று, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 700 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். அக்.29-ம் தேதியன்று 2,125 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். அக்.30ம் தேதியன்று வழக்கமான பேருந்துகளுடன்,2,075 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். எனவே, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

மேலும், நெரிசலை தவிர்பப்தற்காக, கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் , திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரத்தில் இருக்கிற புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், வழக்கமாக திருச்சி, சேலம் மற்றும் கும்பகோணம், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இயக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததை விட, இந்தாண்டு கூடுதலான பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

2021ம் ஆண்டு 9,929 பேருந்துகள் இயக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு 10,757 பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்தாண்டு 10,546 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தாண்டு 11,176 என்ற அளவில் கூடுதலான பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப, அந்ததந்த பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கும் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் என 9 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் முன்பதிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News