சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டடத்தில் விரிசல்!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதால் ஊழியர்கள் அச்சத்தில் வெளியேறினர்.

சென்னை தலைமைச் செயலக வளாத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 10 தளங்கள் உள்ளன.

முதல் தளத்தில் விவசாயத் துறை சார்ந்த அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த தளத்தில் தரையில் உள்ள டைல்ஸில் திடீரென சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், அங்கிருந்து வெளியேறினர். முதல் தளத்தைத் தொடர்ந்து, கட்டடத்தின் பத்து தளங்களில் இருந்த பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர்.

தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர், சம்பந்தப்பட்ட தளத்தில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் இது காற்று வெடிப்பினால் ஏற்பட்ட சாதாரண விரிசல்தான், பயப்படத் தேவையில்லை என்று காவல்துறையினர் கூறினர். பொதுப்பணித் துறை இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

எனவே, ஊழியர்கள் தங்கள் பணியைத் தொடருமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதன்பேரில் ஊழியர்கள் பணிக்குத் திரும்புகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES

Recent News