கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செந்தில் நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில் அடுத்தடுத்து தொடர் கொள்ளையில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பணம் ரொக்கம் ஆகியவற்றை முகமூடி திருடன் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயக்கோட்டை சாலையில் செந்தில் நகர் குடியிருப்பு பகுதி அருகே ஒரே வளாகத்தில் சித்தி விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் திருக்கோயில்கள் அமைந்து உள்ளன.
இந்தக் கோயிலில் கடந்த 22-ஆம் தேதி அன்று நள்ளிரவு, சுமார் 2 மணி அளவில் துர்க்கை அம்மன் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து நகை பணம் திருடிச் சென்றுள்ளனர்.
அதேபோல, அதே வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று (அக்.31) அதிகாலை 4 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணம் நகை உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் கோவில்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு மர்ம நபர் முகமூடி அணிந்து கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ காட்சி பதிவுகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையனை தேடி வருகின்றனர்.