கல்லறை திருநாளான இன்று (நவ.2) கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து கல்லறைகளில் பிரார்த்தனை செய்தனர்.
ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஆத்மாக்களின் திருநாள் என்று அழைக்கப்படும் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர்.
இதையடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், என பலர் கிறிஸ்தவ வேதத்தை படித்து, பாடல்களை பாடி, பின்னர் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர்கள் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்து மறைந்த உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, தங்களின் குடும்பத்தினருக்கு ஆசி வழங்க வேண்டி கொண்டனர்.