தலைநகர் டெல்லியில் கடும் காற்று மாசு காரணமாக மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இன்று (நவ.5) காலை நகரின் சில பகுதிகளில் மெல்லிய புகை மூட்டம் சூழ்ந்து காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் பதிவாகியுள்ளது. துவாரகா, ஆனந்த் விஹார் உள்ளிட்ட பல இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 400-ஐ தாண்டியது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின்படி அதிகபட்சமாக ஆனந்த் விஹார் பகுதியில் 453, ஜஹாங்கிர்புரில் 440, அசோக் விஹாரில் 418, துவாரகா செக்டர் 8ல் 407,விமான நிலையத்தில் 387, ஐடிஓ பகுதியில் 345, பட்பர்கஞ்ச் பகுதியில் 395, பஞ்சாபி பாக்கில் 403, விவேக் விஹாரில் 421, வசீர்பூரில் 438, அலிபூரில் 386 ஆகவும் காற்றின் தரக்குறியீடு பதிவாகின.
காற்று மாசு எதிர்ப்பு நடவடிக்கை செயல் திட்டத்தின் கீழ் டெல்லி என்.சி.ஆரில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான மையக் குழு, அக்டோபர் 15 முதல் 31 வரை மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க தவறியதற்காக 56 கட்டுமான மற்றும் இடிப்பு தளங்களை மூடவும், 597 தளங்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுப்படி நகரம் முழுவதும் துப்புரவு இயந்திரங்கள் மூலம் தூசுகளை அகற்றி தண்ணீர் தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது மேலும் மாநகராட்சி திடக்கழிவுகளை எரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி தகவலின் படி நாள்தோறும் 600 தண்ணீர் தெளிப்பான் மற்றும் புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் காற்று மாசு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டு குறித்தும் பிரத்யேக குழு ஆய்வு செய்து வருகிறது. காற்று மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகள் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.