திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.7) மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 7-வது நாளான இன்று (நவ.7) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு யாக சாலையில் யாகபூஜை தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்தி ஆவதற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற உள்ளது. இதனையடுத்து 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்கு பின்னர் மாலை 2.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு மாவு பொடி, மஞ்சள் பொடி, திரவியபொடி உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின்னர் 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர்
கடற்கரையில் எழுந்தருளுகிறார்.
அங்கு சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், அடுத்து சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்நிகழ்ச்சிகாக 4500 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு கேமரா மூலம்
பக்தர்களை கண்காணித்து வருகின்றனர். கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கடலில் தடுப்புகள் அமைத்து கடலோர பாதுகாப்பு குழுமம் 90 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.