மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. பழ வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த 25-ஆம் தேதி அன்று, வெளியூருக்கு சென்றிருந்தார். திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரா உடைக்கப்பட்டு, 90 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முனுசாமி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த அப்பகுதி காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். அதில், பக்கத்து வீட்டை சேர்ந்த சோனை என்பவரது இளைய மகன் வெள்ளைச்சாமி மீது சந்தேகம் இருப்பதாக முனுசாமி கூறியிருந்தார்.
ஏன் சந்தேகம் என்று கேட்டதற்கு, சாப்பாட்டுக்கே வழி இல்லை என்று சோனை என்னிடம் கூறியிருந்தார். ஆனால், அவரது மகன் வெள்ளைச்சாமி, புதிதாக பல்சர் பைக் வாங்கி, அதனை வாட்ஸ் அப் ஸ்டேடஸில் பதிவிட்டிருந்தார் என்று முனுசாமி கூறியிருந்தார். இதையடுத்து, வெள்ளைச்சாமியை அழைத்து விசாரணை நடத்தியதில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அதாவது, வெள்ளைச்சாமி, அவரது அண்ணன் சேது, அவரது நண்பன் கேசவன் ஆகிய 3 பேரும் இணைந்து, முனுசாமி வீட்டில் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து பணத்தை மீட்ட காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.