உள்ளாட்சி தினமான நவம்பர் 1-ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அக்டோபர் 31-ம் தேதிக்கு தீபாவளி விடுமுறை தொடர்ந்து அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் இந்த கிராம சபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
தள்ளி வைக்கப்பட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (நவ.23) தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் அயோத்தியாபட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட டி. பெருமாபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பிக்கப்பட்டது தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டியமுன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து இறுதி கிராம சபை கூட்டம் என்பதால் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மூதாட்டிகள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரின் கைகளைப் பிடித்துக் கொண்டு நீங்கள் தான் மீண்டும் தலைவராக வரவேண்டும் உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யாரும் இல்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் கிராம சபை கூட்டமே சோகத்தில் மூழ்கியது.
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பெண்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அனைத்து தரப்பு மக்களும் ஊராட்சி மன்ற தலைவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.