செங்கல்பட்டு தலைநகரில் இயங்கி வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபாதை வியாபாரிகள் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தனியார் வேன் உள்ளிட்ட வாகன நிறுத்துமிடமும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி நேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் எனக் கூறி அங்குள்ள நடைபாதை வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.மேலும் அப்பகுதியில் கம்பி வேலிகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதாக மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியும் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.