2020-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், ஆந்திரா மாநிலத்தில் சோலார் பவர் ஒப்பந்தம் பெறுவதற்கு, டெண்டர் விடுப்பட்டது.
இதனை பெறுவதற்காக, மாநில அரசின் அதிகாரிகளுக்கு, 2 ஆயிரத்து 29 கோடி லஞ்சம் கொடுத்ததாக, அதானி குழுமத்தை சேர்ந்த கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது, அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததாக, கடந்த வாரம் தகவல் பரவி வந்தது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ராஜ்ய சபா எம்.பியுமான மகேஷ் ஜெத்மலானி, இந்த விவகாரம் குறித்து, தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், “இது ஒரு அடிப்படை ஆதாரம் அற்ற, அரசியல் ஆதாயம் உள்ள குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் நற்மதிப்பை களங்கப்படுத்துவதற்கான மலிவான முயற்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஒருவேளை லஞ்சம் கொடுக்கப்பட்டிருந்தால், லஞ்சத்தை பெற்றவர்களின் பெயர்கள், எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது, எப்போது, எங்கு பணப்பரிவர்த்தனை நடந்தது உள்ளிட்ட விவரங்கள், அந்த குற்றப்பத்திரத்தில் இடம்பெற்றிருக்கும்” என்று கூறியுள்ளார்.