திருவண்ணாமலையில் நிலம் அளவீடு செய்ய போலீஸ்காரரிடம் 12,500 ரூபாய் லஞ்சம் பெற்ற சர்வேயர் மற்றும் வி.ஏ.ஓ., உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சே. அகரம் கிராமத்தை சேர்ந்தவர், சாம்பசிவம் மகன் அஜீத் (29) இவர், தற்போது சென்னையில், போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது தந்தை ஏற்கனவே இறந்த நிலையில், அவரது தாயார் சாந்தி பெயரில், வீட்டிற்கு பின்புறம் உள்ள நிலத்தை அளவீடு செய்ய, கடந்த நவம்பர் 18 -ஆம் தேதி விண்ணப்பித்தார்.
அதற்கு ஒப்பந்த சர்வேயர் ரஞ்சித்குமார் மற்றும் பெரும்பாக்கம் வி.ஏ.ஓ., உதவியாளர் அரிகிருஷ்ணன், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். இதில், இரண்டு தவணைகளாக, 10,500 ரூபாய் கொடுத்த நிலையில், மீதமுள்ள லஞ்ச பணத்தையும் கொடுத்தால்தான் அளக்க முடியும் என ஒப்பந்த சர்வேயர் ரஞ்சித்குமார் திட்டமிட்டவட்டமாக கூறி மறுத்துவிட்டார்.
இது குறித்து அஜீத், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், பெரும்பாக்கம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் 2,000 ரூபாயை லஞ்சமாக பெற்றபோது ஒப்பந்த சர்வேயர் ரஞ்சித்குமார் மற்றும் வி.ஏ.ஓ., உதவியாளர் அரிகிருஷணன், ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.