மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி அன்று, தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி, 230 இடங்களை கைப்பற்றி வெற்றிப் பெற்றது.
இதில், 132 இடங்களை பாஜகவும், 57 இடங்களை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவும், 41 இடங்களை அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பெற்றிருந்தன. மெஜாரிட்டி இடங்களை இந்த கூட்டணி பெற்றிருந்தபோதிலும், ஆட்சியமைப்பதில் சிறிய சிக்கல் ஏற்பட்டது.
அதாவது, யார் முதலமைச்சர் என்பதில், கூட்டணி கட்சியினர் இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வந்தது. இதனால், 3 கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் இணைந்து, இரண்டு முறை சந்தித்து, ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தான், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகந்த் ஷிண்டே, துணை முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, உள்துறை அமைச்சர் பதவியை அவர் கோரியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.