AQI என்ற பெயரில், காற்றின் தரம் குறிக்கப்பட்டு வருகிறது. அந்த அளவின் படி, 0-ல் இருந்து 50 என்ற அளவில் இருந்தால், அது நல்ல காற்றின் தரத்தை குறிக்கிறது. 51-ல் இருந்து 100 வரை, மிதமான காற்றின் தரத்தையும், 101-ல் இருந்து 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தையும் குறிக்கிறது.
மேலும், 201-ல் இருந்து 300 வரை இருந்தால் மோசமானது என்றும், 301-ல் இருந்து 400 வரை இருந்தால், ஆபத்தானது என்றும் கூறப்படுகிறது. 401-ல் இருந்து 450 வரை இருந்தால் மிக ஆபத்தானது என்றும், அதற்கு மேல் சென்றால், மிக மிக ஆபத்தானது என்றும் குறிக்கப்படுகிறது.
இந்த அளவுகளின் படி பார்க்கும்போது, தலைநகர் டெல்லியில் மிக மிக ஆபத்தான அளவிலேயே காற்றின் தரம் இருந்து வருகிறது. சுற்றுவட்டார மாநிலங்களில் விவசாய பயிர்களை எரிப்பதன் காரணமாக தான், இவ்வளவு மோசமாக காற்றின் தரம் அங்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லியின் காற்று தரக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று காலையில் இருந்து 273 AQI என்ற அளவில், காற்றின் தரம் இருந்து வருகிறது. இது மோசமான காற்றின் தர அளவாக இருந்தபோதிலும், நேற்றைய தரக் குறியீட்டை காட்டிலும், தற்போது கணிசமான அளவில் தரம் உயர்ந்துள்ளது.
அதாவது, 285 என்ற அளவில் நேற்று காற்றின் தரம் உள்ளதாக கூறப்பட்டிருந்தது. காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்ததற்கு, சூரிய ஒளியும், வடமேற்கு திசையில் வீசிய வறண்ட காற்றும் தான் காரணம் என்று, நிபுணர்கள் கூறியுள்ளனர். என்னதான் காற்றின் தரம் உயர்ந்திருந்தாலும், குழந்தைகள், உடல்நல பாதிப்பு உடையோருக்கு, இது மோசமான அளவாக தான் பார்க்கப்படுகிறது.