ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் வெள்ள பாதிப்பு நிவாரணம் நிதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூரையாடியுள்ளது. 65 லட்சம் குடும்பங்கள் மற்றும் 1.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க இடைக்கால நிவாரண நிதியாக ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.