சென்னை மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பல சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிலும் பருவ மழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் வடிகால்வாய் பணிகள் நடைபெறுவதால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பணிகள் சரிவர நடைபெறாமல் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில், வீர பெருமாள் கோவில் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
அதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் மிலான் தாஸ் என்பவர் வடிகால் பணிகளுக்காக சென்ட்ரிங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து உயிர் இருந்து உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இது போன்ற மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருவதும், பணியாளர்களுக்கு போதிய உபகரணங்கள் இல்லாமல், இரவு நேரங்களில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை அவசரகதியில் மேற்கொண்டு வருவதே இது போன்ற விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.