உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில், கடந்த சனிக் கிழமை அன்று, புதைந்து கிடந்த அனுமன் கோவில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கோவிலை சுற்றிலும், அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கோவிலுக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில், குப்பைகளை சுத்தம் செய்வதற்காக, பணியாளர்கள் முயன்றுள்ளனர். அப்போது, இரண்டு சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சிலைகளில், ஒன்று விநாயகர் சிலை என்றும், மற்றொன்று, முருகன் சிலை போல இருப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சாம்பல் பகுதியின் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சிருஷ் சந்திரா, ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “கிணற்றை தோண்டும்போது, உடைந்து போன இரண்டு சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஒன்று விநாயகர் சிலை. மற்றொன்று, பார்ப்பதற்கு கார்த்திகேயா ( வடஇந்தியாவில் முருகன் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார் ) சிலை போல உள்ளது.
மேலும், அகழ்வாராய்ச்சியை சீராக நடத்துவதற்காக, அப்பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் வரப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.