வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் கோகுல். அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வரும் இவர், மனைவி மற்றும் 2 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவியின் தோழிக்கும், கோகுலுக்கும் இடையே, காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே, அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயம் செய்ததால், கோகுலை மிரட்டி கோவிலில் வைத்து, திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பின்னர், பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், கோகுலிடமும், அந்த பெண்ணிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மேலும், தன்னுடைய கணவனை விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கோகுலின் மனைவியும் கண்ணீர் மல்க கேட்டுள்ளார். இருப்பினும், கோகுலை கைவிட மறுத்த அந்த பெண், “நான் கர்ப்பமாக இருக்கிறேன்.. கோகுல் எனக்கு தான் சொந்தம்” என்று கூறியுள்ளார்.
இப்படியே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த போலீசார், அந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அதில், அவர் கர்ப்பம் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, “நீ கோகுலை கைவிடவில்லை என்றால், அவனை கைது செய்ய வேண்டிய சூழல் வரும்” என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், “நான் தாலிய கழட்டி கொடுத்துடுறேன்.. ஆனா அவன கைது பண்ணாதீங்க” என்று கதறி அழுதுள்ளார். பின்னர், தன்னுடைய தாலியை கழட்டி கொடுத்துவிட்டு, காவல்நிலையத்தில் இருந்து வெளியேறினார். அந்த பெண் செய்த களேபரத்தால், காவல்நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.