ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரில், டோயோசு என்ற மீன் மார்கெட் உள்ளது. இதுதான், உலகிலேயே மிகப்பெரிய மீன் மார்கெட் என்று கூறப்படுகிறது. மேலும், டூனா வகை மீன்களின் ஏலத்திற்கு பெயர்போன மார்கெட்டுகளில் ஒன்றாக இது உள்ளது.
இவ்வாறு இருக்க, புத்தாண்டை முன்னிட்டு, ஏலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அப்போது, மோட்டார் பைக் அளவுள்ள, 276 கிலோ எடையுள்ள ப்ளுஃபின் டூனா வகை மீன், ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த ஏலத்தில், பல்வேறு உணவக நிறுவனங்கள் கலந்துக் கொண்டு, மீனை வாங்க முயற்சி செய்தனர்.
ஆனால், இறுதியில், 207 மில்லியன் யென் பணத்தை கொடுத்து, ஒனோடெரா என்ற பிரபல உணவகம், அந்த டூனா மீனை வாங்கியுள்ளது. இந்திய மதிப்பின் படி பார்த்தால், 10 கோடி ரூபாய்க்கு, அந்த மீன் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “ஆண்டின் தொடக்கத்தில் பிடிபடும் டூனா மீன், நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும், “வடக்கு ஜப்பானின் ஆமோரி பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை சாப்பிடுபவர்களுக்கு, அந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும்” என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரபல உணவக நிறுவனம், கடந்த ஆண்டு 114 மில்லியின் யென்னிற்கு, டூனை மீனை ஏலத்தில் வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 2019-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில், 278 கிலோ எடையுள்ள ப்ளுஃபின் டூனா வகை மீன், 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தது.
இந்த ஏலத்தை எந்த நிறுவனம் கைப்பற்றியது என்பது தொடர்பான தகவல், தற்போது கிடைக்கவில்லை. ஆனால், இதுதான், அந்த மார்கெட்டிலேயே, அதிக தொகைக்கு ஏலத்தில் விலைபோன மீன் என்று கூறப்படுகிறது. டூனா வகை மீன்கள் மட்டுமின்றி, ஹோக்கைடோ கடலில் உள்ள முள்ளெலிகளும், இந்த ஏலத்தில் நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்படுகின்றனவாம். கிட்டதட்ட 38 லட்சம் ரூபாய் வரை, ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனவாம்.