அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விவாதிக்க, எதிர்கட்சியினர் தரப்பில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை, சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டு, விவாதிக்க அனுமதி வழங்கினார். அதன்படி, ஒரு கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ-க்கள் என்ற கணக்கில், இந்த விவகாரம் தொடர்பாக பேசினர். இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதில் அளித்துள்ளார். சட்டமன்றத்தில் அவர் பேசியது பின்வருமாறு:-
“அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என்பது, மாபெரும் கொடூரம். அதனை யாராலும், நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சியினர் தங்களது கருத்துக்களை பேசியுள்ளீர்கள். உண்மையான அக்கறையுடன் பல உறுப்பினர்கள் பேசியுள்ளீர்கள். இந்த சம்பவத்தை பயன்படுத்தி, இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தவும் ஒருவர் பேசியிருக்கிறார்” என்று கூறினார்.
தொடர்ந்து, “பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நின்று, சட்டப்படி அவருக்கு நியாயம் பெற்றுத் தரப்படும் என்பதை தவிர, தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன். குற்றவாளியை கைது செய்யாமல் இருந்திருந்தாலோ, அவரை காப்பாற்ற நினைத்திருந்தாலோ, அரசை குறை சொல்லியிருக்கலாம். ஆனால், குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகு, அரசை குறை கூறுவது, அரசியலுக்காக தான்” என்று கூறினார்.
“முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு, ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் NIC தான் காரணம். அதன்பிறகு, தமிழக காவல்துறை, இந்த விஷயத்தை சுட்டிக் காட்டிய பிறகு, அந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது” என்று முதல் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்தார்.
பின்னர், சிசிடிவி கேமராக்கள் இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த முதலமைச்சர், “சிசிடிவி கேமராக்களின் உதவியோடு தான், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்” என்று விளக்கம் தந்தார்.
இதையடுத்து, யார் அந்த சார் என்ற குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், “உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு தான், இந்த வழக்கை விசாரிக்கிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த புலன் விசாரணையில், வேறு யாரேனும் இந்த வழக்கில் தொடர்பில் இருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் தயவு தாட்சன்யமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கும். மேலும், இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், “உண்மையிலேயே யார் அந்த சார் என்று உங்களுக்கு தெரிந்தால், நீங்களே புலனாய்வு குழுவிடம் இதுகுறித்து தெரிவியுங்கள். அதை தவிர்த்துவிட்டு, வீண் விளம்பரத்திற்காக, மலிவான செயலில், ஈடுபட வேண்டாம்” என்று முதலமைச்சர் கடுமையாக விமர்சித்தார்.
இவ்வாறு தொடர்ச்சியாக பேசிய அவர், பெண்களின் பாதுகாப்பில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்றும், ஆனால் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி விவகாரத்திற்கு, அன்றைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.ஐ. வழக்கு சென்ற பிறகு தான், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது” என்று கூறினார்.