உதவி பேராசிரியராக பணியாற்றவும், பி.எச்.டி படிப்பதற்கும், தகுதி தேர்வாக இருப்பது NET. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில், 2 முறை நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை டிசம்பர் மாதத்துக்கான தேர்வு, ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுவதாக, அறிவிக்கப்பட்டது. ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவதால், அந்த தேதியில் நடத்தப்படும் தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதி, தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல், பல்வேறு அரசியல் தலைவர்கள் அழுத்தம் கொடுத்ததால், இன்று நடைபெற இருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தேர்வுக்கான புதிய தேதியை, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நடக்க இருந்த 17 பாடங்களுக்கான தேர்வு, ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.