கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவரும், அதே பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அன்று, தனது காதலியின் வீட்டிற்கு, ஷாரோன் ராஜ் சென்றுள்ளார்.
அப்போது, காதலி கொடுத்த குளிர்பானம் குடித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பியுள்ளார். அங்கிருந்து கிளம்பியதில் இருந்து வயிற்று வலியால் துடித்த ஷாரோன் ராஜ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் கிரீஷ்மாவையும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் கைது செய்தனர்.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், “எனக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அவரை திருமணம் செய்தால், தன்னுடன் இருந்த புகைப்படங்களை, புது மாப்பிள்ளையிடம் ஷாரோன் ராஜ் காட்டிவிடுவார் என்ற பயம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்தேன்” என்று வாக்குமூலம் அளித்தார்.
இதுதொடர்பாக, கேரள நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், கிரீஷ்மா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனை விவரங்களை இன்று அறிவித்த நீதிமன்றம், கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையையும், அந்த பெண்ணின் தாய் மாமாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி, உத்தரவிட்டது.