பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட புதிய வரைவு நெறிமுறைகளை, திரும்ப பெற வேண்டும் என்று, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், புதிய வரைவு நெறிமுறைகளில் குறைகள் இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு, கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் பொறியியல் பிரிவுகளில் முதுநிலை பட்டம் படிக்கலாம், துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சாதிவாரி கணக்கெடுப்பு: மாநில உரிமைகளை காப்பது பற்றி பிகார், கர்நாடக முதல்வர்களுக்கு கடிதம் எழுதி கேட்டாவது மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்!
துணைவேந்தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்தில் மாநில உரிமைகளைக் காக்க வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது நல்ல முயற்சி தான். பாட்டாளி மக்கள் கட்சியும் அதைத் தான் வலியுறுத்தி வருகிறது.
அதேவேளையில், சமூகநீதியைக் காப்பதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளை அப்பட்டமாக தாரை வார்த்துக் கொண்டிருக்கிறாரே, அந்த விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை எவ்வாறு காப்பது என்பது குறித்து இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ள பிகார், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியாவது கேட்டறிவாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
மாநில உரிமைகளைக் காப்பதில் யு.ஜி.சி விதிகளில் ஒரு வேடம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா?
எப்போது கலையும் இந்த இரட்டை வேடம்?” என்று கூறியுள்ளார்.