12 லட்சமா? 4 லட்சமா? வருமான வரி விலக்கு உச்சவரம்பு.. குழப்பம் அடையும் மக்கள்.. எளிய விளக்கம் இதோ..

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், வருமான வரி விலக்கு உச்சவரம்பு, 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம், மாத வருமானம் 1 லட்சம் ரூபாய் வருமானம் பெறுவோர், வரி கட்டத் தேவையில்லை என்ற நிலை உருவானது.

ஆனால், இன்னொரு இடத்தில், 4 லட்சம் வரை வருமான வரி இல்லை, 4 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 8 லட்சம் வரை 5 சதவீத வரியும், 8 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 12 லட்சம் வரை 10 சதவீத வரியும், 12 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 16 லட்சம் வரை 15 சதவீத வரியும், 16 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 20 லட்சம் வரை 20 சதவீத வரியும், 20 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 24 லட்சம் ரூபாய் வரை 25 சதவீத வரியும், 24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

ஒரு இடத்தில் 12 லட்சம் வரை வரி இல்லை என்று கூறிவிட்டு, வேறொரு இடத்தில் 4 லட்சத்திற்கு மேலே சென்றால் வரி என்று குறிப்பிடுகிறார்களே என்று, சிலர் குழப்பம் அடைந்திருந்தார்கள். இதுகுறித்து, தற்போது தெளிவாக பார்க்கலாம்.

அதாவது, “அ” என்ற நபர் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது முதல் 4 லட்ச ரூபாய் வருமானத்திற்கு வரி கட்டத்தேவையில்லை. ஆனால், அடுத்த 4 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 8 லட்சம் ரூபாய் வரை உள்ள பணத்திற்கு 5 சதவீத வரி கட்டுவார்.

அந்த மதிப்பீட்டின் படி, 4 லட்சத்திற்கு 5 சதவீதம் என்றால், 20 ஆயிரம் ரூபாய் வரி கட்ட வேண்டும். பின்னர், 8 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 12 லட்சம் வரை உள்ள பணத்திற்கு 10 சதவீத வரி கட்டுவார்.

அந்த மதிப்பீட்டின் படி, 4 லட்சத்திற்கு 10 சதவீதம் என்றால், 40 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும். மொத்தமாக கூட்டினால், 60 ஆயிரம் வரி செலுத்த வேண்டும். ஆனால், பிரிவு 87A-ன் அடிப்படையில், Tax Rebate என்ற புதிய விஷயம் உள்ளே நுழைகிறது. இதன் அடிப்படையில், நமது வருமானம் 12 லட்சமாக இருக்குமானால், நாம் செலுத்த வேண்டிய 60 ஆயிரத்தை, அரசு தள்ளுபடி செய்துவிடும்.

இந்த விளக்கம் ஒரு புறம் இருக்கட்டும். தற்போது இன்னொரு விளக்கத்தை பார்க்கலாம்.

“ஆ” என்று இன்னொரு ஊழியர் உள்ளார். அவரது வருட வருமானம் 16 லட்சமாக உள்ளது. ஏற்கனவே கணக்கு செய்ததன் அடிப்படையில், முதல் 12 லட்சத்திற்கு இவர் 60 ஆயிரம் ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். மேலும், அடுத்த 4 லட்சத்திற்கு 15 சதவீத வரி என்ற அடிப்படையில், 60 ஆயிரம் வரி செலுத்த வேண்டும்.

அதாவது, மொத்தமாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை, அவர் வரியாக செலுத்துவார். இவரது ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கு மேல் இருப்பதால், Tax Rebate என்ற முறையை பயன்படுத்த முடியாது. எனவே, 1.20 லட்சத்தையும் அந்த தனிநபர் வரியாக செலுத்த வேண்டும்.

பிரிவு 87ஏ-ன் கீழ் வரும் Tax Rebate என்ற முறையால் தான், 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். ஆனால், இவை அனைத்தும், புதிய வரி விதிப்பு முறையின் கீழ் மட்டுமே செல்லுபடியாகும்.

RELATED ARTICLES

Recent News