சென்னை எழும்பூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், கடந்த ஜூலை மாதம் அன்று, தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கு, மின்கசிவு தான் காரணம் என்று, முதற்கட்ட விசாரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது விபத்து அல்ல, தன்னை கொல்வதற்காக செய்யப்பட்ட சதி என்று, தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியிடம், கூடுதல் டிஜிபி கல்பனா நாயக், புகார் அளித்துள்ளதாக, செய்திகள் பரவி வருகிறது. மேலும், சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் தான், கொலை செய்ய முயற்சிகள் நடந்தது என்று அவர் புகாரில் கூறியதாகவும், செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. மேலும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வரை, பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பழனிச்சாமி வெளியிட்ட பதிவில், இந்த செயலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார் என்றும், முறைகேடுகளை அம்பலப்படுத்தினால், ஏ.டி.ஜி.பி-யாக இருந்தாலும் மிரட்டலும், கொலையும் தான் பதிலா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கல்பனா நாயக்கின் அளித்துள்ள புகார் குறித்து, தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உண்மை என்ன? என்பது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.