டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இன்று அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 70-க்கு 36 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், 10 இடங்களில் முன்னிலை வகித்து வரும் பாஜக, 37 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது.
மேலும், 3 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஆம் ஆத்மி 20 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. ஆனால், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், காங்கிரஸ் பின்தங்கியே உள்ளது. இதன்மூலம், 27 வருடங்களுக்கு பிறகு, பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
முக்கிய தலைவர்கள் தோல்வி
இந்த டெல்லி தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி, மனிஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி, சத்யேந்தர் ஜெயின் போன்ற முக்கிய தலைவர்கள், போட்டியிட்டனர். இவர்கள் தான், ஆம் ஆத்மி கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களாகவும் கருதப்பட்டனர்.
ஆனால், இவர்களில், அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோர், தங்களது தொகுதிகளிலேயே தோல்வியை தழுவியுள்ளனர். மேலும், முதலமைச்சர் அதிஷி நூலிழையில் தோல்வியில் இருந்து தப்பி, வெற்றிப் பெற்றுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா போன்றோரோ தோல்வி அடைந்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோல்விக்கு காரணம்
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை. இது, இவர்களது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல்வேறு தலைவர்கள், மதுபான் ஊழல் முறைகேடு என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தனர்.
மேலும், டெல்லிவாசிகள் பலரும், தண்ணீர் தட்டுப்பாடு, காற்று மாசு போன்ற பல்வேறு பிரச்சனைகளால், பாதிக்கப்பட்டனர். இதற்கு, ஆம் ஆத்மி அரசு உரிய நிவாரணத்தை ஏற்படுத்தித்தரவில்லை. இந்த விவகாரங்களில், ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டதாக, அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தலைவர்களின் கருத்து
டெல்லி தேர்தலில் ஆத் ஆத்மி, காங்கிரஸ் தோல்வி அடைந்திருப்பது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, சட்டமன்ற தேர்தல்களிலும், இண்டியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், இந்த தோல்வி ஒரு படிப்பிணையை கொடுத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கான வழியை, இண்டியா கூட்டணி தலைவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வி குறித்து, அண்ணா ஹசாரே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், பண பலம், மதுவின் மீது மட்டுமே கெஜ்ரிவால் கவனம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வெற்றியால் பூரிப்படைந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மக்கள் சக்தியே முதன்மையானது. வளர்ச்சியும், நல்ல ஆட்சியும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த பெரும் வெற்றிக்காகவும், வரலாற்று தீர்ப்புக்காகவும் டெல்லியின் சகோதர, சகோதரிகளிடம் நான் தலை வணங்குகிறேன். நாங்கள் மிகவும் பணிவுடன் உங்களது இந்த ஆசியை பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “டெல்லியின் வளர்ச்சிக்கு, எங்களால் முடிந்த அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம். மேலும், மக்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் அடைய வைப்போம். விக்ஸித் பாரதத்தை உருவாக்குவதற்கு, டெல்லிக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை உறுதி செய்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.