ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த 5-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலை, பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்டோர் புறக்கணித்த நிலையில், திமுகவும், நாம் தமிழர் கட்சியும் களம் கண்டன. திமுக சார்பில், வி.சி.சந்திரகுமாரும், நா.த.க. சார்பில் சீதா லட்சுமியும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி, இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது. ஆரம்பம் முதலே திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது வெற்றி நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகளை பெற்று, வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சீதா லட்சுமி, 23 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். 25 ஆயிரத்து 777 வாக்குகள் பெற்றால், டெபாசிட் பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், ஆயிரத்து 967 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது. இதன்மூலம், இந்த முறையும், நாம் தமிழர் கட்சியால், டெபாசிட் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.