அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், சில பிரச்சனைகளின் காரணமாக, கட்சியில் நீக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில், தொடர்ச்சியாக சட்டரீதியாக, அதிமுக -வை மீட்க முயன்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று ஓ.பன்னீர் செல்வம் மதுரை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியுடன் தன்னை அழைத்து செல்லுமாறு தான் கூறியதே கிடையாது என்று தெரிவித்தார். மேலும், தன்னைப் பற்றி பேசுவதை, ஆர்.பி.உதயகுமார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறு இருக்க, ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், கட்சியின் ஒற்றுமைக்கு யாருமே தடையாக இல்லை என்றும், ஒற்றுமைக்கு சிலர் தடையாக இருப்பது போன்ற தோற்றத்தை, ஓ.பி.எஸ் ஏற்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவே தனக்கு நற்சான்று கொடுத்திருப்பதாக, பன்னீர் செல்வம் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால், அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக, ஜெயலலிதா என்னிடமே கூறியிருப்பதாகவும், ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பன்னீர் செல்வத்திற்கு, ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.