ஹமாஸ் என்ற அமைப்புக்கும், இஸ்ரேல் நாட்டிற்கும் இடையே, கடந்த 1 வருடங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, ஹமாஸ் தங்களிடம் உள்ள பணயக் கைதிகளையும், இஸ்ரேல் நாடு, தங்களது வசம் உள்ள பாலஸ்தீனிய பணயக் கைதிகளையும் உடன்படிக்கையின் அடிப்படையில் விடுவித்து வருகிறது. இவ்வாறு இருக்க, நேற்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் 6 பேரை, ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது. அப்போது, அந்த 6 பேரில் ஒருவர், ஹமாஸ் ஆயுதப்படைக் குழுவை சேர்ந்த 2 பேருக்கு, நெற்றியில் முத்தமிட்டார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி, வைரலாக பரவி வந்தது. மேலும், ஹமாஸ் குழுவினர் சிறப்பாக நடந்துக் கொண்டதால் தான், பணயக் கைதி முத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, ஹமாஸின் வற்புறுத்தலால் தான், பணயக் கைதி முத்தம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
அதாவது, ஹமாஸ் தரப்பில் வீடியோ எடுக்கும் நபர், பணயக் கைதியை வற்புறுத்தும் வீடியோ, தற்போது ரிலீஸ் ஆகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன்மூலம், பணயக்கைதி, தாமாக முன்வந்து, முத்தம் கொடுக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.