உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இருப்பது எக்ஸ். இந்த சமூக வலைதளம், நேற்று பிற்பகல் 3 மணிக்கு, உலகம் முழுவதும் முடங்கியது. இதனால், இதன் பயனாளர்கள் அவதி அடைந்தனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, 4 மணி அளவில், முடக்கம் நீக்கப்பட்டது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தியதில், எக்ஸ் தளம் முடங்கியதற்கு, சைபர் தாக்குதல் தான் காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு காரணம் உக்ரைன் தான் என்று, எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே, பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா, டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை, அமெரிக்கா நிறுத்தியது.
மேலும், அந்நாட்டில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்கும், அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதற்கிடையே, டிரம்பின் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எலான் மஸ்கின் சமூக வலைதளம், பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.