தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருந்தவர் சௌந்தர்யா. இவர், கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட விமான விபத்தில், பரிதாபமாக உயிரிழந்தார். இது, அந்த சமயத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சௌந்தர்ய விபத்தின் காரணமாக உயிரிழக்கவில்லை என்றும், இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்றும், தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக ஆர்வலர் சிட்டிமல்லு என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், “பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, சௌந்தர்யாவுக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு கேட்டார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஆனால், தற்போது அந்த நிலத்தை, மோகன் பாபு ஆக்கிரமித்துள்ளார்.
சௌந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்தில் சிக்கியது என்ற காரணம், இதுவரை தெரியவில்லை. விமான விபத்தில், ஏதேனும் சதி உள்ளதா? மோகன் பாபுவுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகார், தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.