வடமாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி. வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை, நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இந்த திருவிழா கொண்டாட்டத்தின்போது, 3 பேர், பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் உள்ள கின்னாய் கிராமத்தை சேர்ந்த 5 பேர், ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளனர்.
இதையடுத்து, தங்களது உடலில் பூசப்பட்டிருந்த சாயங்களை கழுவுவதற்காக, இந்திரயாணி ஆற்றிற்கு சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராவிதமாக குளிக்க சென்ற 5 பேரில், 3 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், 3 பேரின் உடல்களை மீட்டனர். பின்னர், அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.