நாடாளுமன்றத்தின் தொகுதிகள் அடுத்த ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், தொகுதிகளின் எண்ணிக்கை குறைய இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக, தங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்று கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. மேலும், நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பி-க்கள் இதுதொடர்பாக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவ்வாறு இருக்க, இன்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசியுள்ளார்.
அதாவது, “தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், ஆதரவு தெரிவித்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
மேலும், “நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிட, தமிழக எம்.பி-க்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றும், “இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் அவர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “தற்போது இருக்கும் தொகுதி வரையறையை 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று, பிரதமர் மோடி கூற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.