சாத்தான்குளம் அருகே, 70 வயது மூதாட்டியை கொன்றுவிட்டு, அவரது நகையை பறித்து சென்ற இளம்பெண்ணை, காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருப்பனை பகுதியை சேர்ந்தவர் வசந்தா. 70 வயதான இவர், தனது கணவன் உயிரிழந்த நிலையில், தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்நிலையில், வசந்தாவின் மகனும், காவலருமான விக்ராந்த், நேற்று தனது தாய்க்கு செல்போனில் நீண்ட நேரமாக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், செல்போனை எடுக்காததால், சந்தேகம் அடைந்த அவர், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது, மர்மமான முறையில், வசந்தா உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைகளும், மாயமாகியுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வசந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், பக்கத்து வீட்டை சேர்ந்த 24 வயது இளம்பெண் தான், நகைக்காக வசந்தாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது. தற்போது, அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நகைக்காக 70 வயது மூதாட்டியை, 24 வயது இளம்பெண் கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.