விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வடமலாபுரம் கிராமத்தில் தேவாங்கர் செட்டியாருக்கு பாத்தியப்பட்ட சாமுண்டீஸ்வரி, சக்தி விநாயகர் கோவில் சாத்தூர் தாயில்பட்டி சாலையில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மதியம் சபரிமலை செல்ல ஏராளமான பக்தர்கள் கோவிலில் இருமுடி கட்டி பூஜை நடத்தி சபரிமலைக்கு பயணம் சென்றுள்ளனர்.
இதனையடுத்து நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டிச் சென்றுள்ளார், இன்று காலையில் கோவிலை திறக்க சென்ற போது கோவிலின் பூட்டு, உடைந்து கீழே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ள சென்று பார்த்த போது கோவிலில் இருந்த 4 பெரிய குத்து விளக்கு, தீபாரதணை தட்டு, மின்மோட்டார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடுபோனதுடன் கோவிலில் இருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கபட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பூசாரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார், திருட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபின்னர் விருதுநகர் சார்பு ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் தடையவியல் நிபுணர்கள் வந்து தடயங்கள் மற்றும் கைரேகை குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் விருதுநகர் மோப்பநாய் உதவியுடன் திருடு நடந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக கன்னி பூஜைகள் மற்றும் மண்டல பூஜைகள் நடைபெற்று முடிந்த கோவில்களில் அதிக அளவில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிய வருகிறது. சாத்தூர் பகுதியில் அடுத்தடுத்து தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் காவல் துறையினர் முறையான ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.