தலைகீழாக நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்..!

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மாதாந்திர கூட்டத்தை முறையாக நடத்த வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைகீழாக நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாதம்தோறும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடத்த வேண்டும். நடைபெறும் கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் ஊராட்சியில் மாதம் தோறும் முறையாக ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதில்லை எனவும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமலே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும், மாதாந்திர கூட்டம் நடத்தாமலே நடைபெற்றதாக வார்டு உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று கையெழுத்து வாங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளையும் கண்டிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைகீழாக நின்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பிய கம்யூனிஸ்ட் கட்சியினர், BDO செல்வகுமாரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினார்கள்.

உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் ஊராட்சி மக்களை ஒன்றிணைத்து நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் எச்சரித்தனர். கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

Recent News