சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக நாகராணி அம்மையார் என்பவர் இருந்து வருகிறார்.இவர் சிறுவயது முதலே கடந்த 46 வருடங்களாக 49 நாட்கள் விரதம் இருந்து முள்படுக்கையில் அமர்ந்தும், நின்று கொண்டும், ஆடியபடியும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு 46–ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்து அருளாசி வழங்குவதற்காக கோவில் முன்பு உள்ள திடலில் உடைமுள், இலந்தை முள், கற்றாழை முள் உள்ளிட்ட பல்வேறு முட்களால் 7 அடி உயரத்துக்கு முள்படுக்கை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மேளதாளம் முழங்க கும்மியடித்து பக்தி பாடல்கள் பாடி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.
இதைதொடர்ந்து நாகராணி அம்மையார் முள்படுக்கையில் நின்று கொண்டும், நடனமாடியும் படுத்துக்கொண்டும், ஆடியபடியும் ஆக்ரோசமாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் இந் நிகழ்ச்சியில் சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.