பஞ்சாபில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் ஜலந்தர் காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் செளத்ரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக பாரத் ஜோடோ யாத்ரா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினர். 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் செளத்ரி பங்கேற்றார். இந்நிலையில் சந்தோக் சிங் செளத்ரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் பக்வாராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறுத்தி வைக்கப்படுவதாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார்.
அவரது திடீர் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சந்தோக் சிங் செளத்ரி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சந்தோக் சிங் செளத்ரியின் இறுதி சடங்கு நாளை காலை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.