ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தென் மண்டல ஐஜி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இதையடுத்து தேனி -மதுரை மாவட்டங்களின் எல்லைப்பகுதி காவல்துறை சோதனை சாவடியில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்கின் தனிப்பிரிவு போலீசார் உடனடியாக விரைந்து வந்து வாகனங்களை தீவிர சோதனையிட்டு அனுப்பி வைத்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மிகவேகமாக வந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார் சோதனை செய்ததில் உணவு பொருட்களுக்கு இடையே கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு கடத்திச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து லாரியில் வந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் , இளவனூர் அருகே உள்ள சிலுப்பியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்தனர்.
பிறகு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கடத்தி வரப்பட்ட சுமார் ஆறு கோடி மதிப்புள்ள 1,200 கிலோ கஞ்சாவையும் கடத்தி வந்த மூன்று பேரையும் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.